திருமிகு கருமுத்து தி. கண்ணன்தலைவர்

திருமதி உமா கண்ணன்,துணைத் தலைவர் முனைவர்



பின்னணி
கல்லூரியின் நிறுவனரான கலைத்தந்தையாரின் அறப்பணிகளை அவரது வழியில் நின்று பொன்னெனப் போற்றி வளர்த்தவர் கலையன்னையார் திருமதி இராதா தியாகராசன் அவர்கள். சைவ சமயத்தின் மீதும் செந்தமிழ் மொழியின் மீதும் தீராப் பற்றுக் கொண்ட கலையன்னையார் அவர்களின் பெரு விருப்பத்தால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் கல்லூரியின் மேலாண்மையர் சார்பாகப் பத்துநாள் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பானது தொடங்கப்பட்டது. அதுமுதல் தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் (நவம்பர் திங்கள்
21 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் முடிய பத்து நாட்கள்) இப்பயிற்சி வகுப்பானது கல்லூரித் தலைவர் திருமிகு கருமுத்து தி. கண்ணன், துணைத் தலைவர் முனைவர் திருமதி உமா கண்ணன், செயலர் திருமிகு க. தியாகராசன் ஆகியோரின் ஆதரவோடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நோக்கம்
சைவ சமயத்தின் மேன்மையை, சிறப்பைப் பறைசாற்றும் பன்னிரு திருமுறைகள் அளவிற்குச் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பொது மக்கள் மத்தியில் பரவலாக்கப்படவில்லை. இந்நிலையில், 'மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்னும் அருள் வாக்கிற்கிணங்க உன்னதமான சைவசித்தாந்த கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் உயரிய குறிக்கோளுடன் இப்பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்காகவும் நடத்தபடுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருபவர்களின் உணவிற்கும் உறைவிடத்திற்கும் கல்லூரி மேலாண்மையரே முழுவதுமாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கென எவ்வகையான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
பயிற்சி வகுப்பின் இயக்குநர்
தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்த‌ துறையிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரும், 'சித்தாந்த சரபம்', 'சிவத்தமிழ்ச் செல்வர்', 'மெய்காண் திருவினார்' முதலிய பட்டங்களைப் பெற்றவரும், இன்று உலக அளவில் பலருக்கும் சைவ சித்தாந்தம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி வருபவருமான முனைவர் ஆ. ஆனந்தராசன் ஐயா அவர்கள் இப்பயிற்சி வகுப்பின் இயக்குநராக இருந்து வழிநடத்தி வருகிறார்கள்.
பொது வகுப்பு, சிறப்பு வகுப்பு
2004 ஆம் ஆண்டுமுதல் 2007 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 70 முதல் 75 பேர் வரை பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஒரே வகுப்பாக நடத்தப்பட்டு வந்த இப்பயிற்சி வகுப்பானது 2008 ஆம் ஆண்டு முதல் பொது வகுப்பு என்றும் சிறப்பு வகுப்பு என்றும் இரு நிலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏறக்குறைய 50 பேர் பங்கேற்கும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
பொது வகுப்பிற்குரிய பாடங்களும் பயிற்றுநர்களும்
சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் சிவஞானபோதம், உண்மை விளக்கம், திருவருட்பயன் ஆகிய மூன்று நூல்களும் பொது வகுப்பிற்குரிய பாடத்திட்டத்தில் முழுமையாக இடம்பெறுகின்றன. சித்தாந்த வித்யாநிதி க. சண்முகம் முனைவர் மு. அருணகிரி, முனைவர் ந. மாணிக்கம், முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, முனைவர் பழ. முத்தப்பன், பேராசிரியர் உ. விஜலெட்சுமி, முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி, முனைவர் யாழ் சு. சந்திரா, முனைவர் சு. காந்திதுரை ஆகியோர் பொதுவகுப்பின் ஆசிரியர்களாக இருந்து சிறப்பித்து வருகின்றனர்.
சிறப்பு வகுப்பிற்குரிய பாடங்களும் பயிற்றுநர்களும்
சிறப்பு வகுப்பில் சிவஞான மாபாடியம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், வினா வெண்பா, கொடிக்கவி, இருபா இருபஃது முதலிய நூல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் ஆழமாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. முனைவர் ஆ. ஆனந்தராசன், சித்தாந்த வித்யாநிதி க. சண்முகம், திருவாவடுதுறை ஆதீனப் புலவர் திரு சு. குஞ்சிதபாதம், முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, சித்தாந்த ரத்தினம் திரு மாணிக்கவாசகம், பேராசிரியர் உ. விஜலெட்சுமி, சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் மு. சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்பு வகுப்பின் ஆசிரியர்களாக இருந்து சிறப்பித்து வருகின்றனர். முனைவர் யாழ் சு. சந்திரா, முனைவர் சு. காந்திதுரை ஆகியோர் பொதுவகுப்பின் ஆசிரியர்களாக இருந்து சிறப்பித்து வருகின்றனர்.
பயிற்சி வகுப்பு - நிகழ்வுகள்

தொடக்கவிழா: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் நாள் பயிற்சிவகுப்பு தொடங்கப்படும். முதல் நாள் அன்று காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெறும். தொடக்க விழாவின் முன்னரும் ஒவ்வொரு நாள் பயிற்சி தொடங்கும் முன்னரும் இறை வழிபாட்டுடன் தொடங்கப்படும்.

வகுப்புகள்: வகுப்புகள் ஒவ்வொரு நாளும் காலை 09.30 மணிமுதல் மாலை 05.30 வரை அட்டவணைப்படி நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்றுநரின் உரையைத் தொடர்ந்து பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்படும். இத்தகு கலந்துரையாடல்கள்வழி பயிற்சியாளர்களின் ஐயங்கள் நிவிர்த்தி செய்யப்படும். சில ஆண்டுகள் சிறப்புச் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டுள்ளன.

திருமுறைப் பயிற்சி: பத்துநாள் சித்தாந்த பயிற்சி வகுப்பின் அங்கமாகப் பயிற்சி காலத்தின் ஒவ்வொரு நாளும் திருமுறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திருமுறைப் பயிற்சியினை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஓதுவாமூர்த்திகள் திரு இரத்தினசபாபதி ஐயா அவர்கள் அளித்து வருகிறார்கள்.

நிறைவு விழா: நிறைவு விழா நவம்பர் 30 ஆம் நாள் அன்று பிற்பகல் 02. 30 முதல் 04. 30 மணிவரை நடைபெறும். நிறைவு விழாவில் கல்லூரியின் மேலாண்மையர் கலந்துகொள்வர். பயிற்சி வகுப்பின் இயக்குநருக்கும் பிற பயிற்றுநர்களுக்கும் கல்லூரி மேலாண்மையர் சார்பில் சிறப்பு செய்யப்படும். தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தலா இருவர் தங்களது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர். பின்னர் பயிற்சி பெற்றோருக்குக் கல்லூரித் தலைவர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிப்பார்.